செய்திகள்

மல்லையா கோர்ட்டுக்கு வருவாரா, வரமாட்டாரா?: உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவு

Published On 2017-05-10 12:40 GMT   |   Update On 2017-05-10 12:40 GMT
விஜய் மல்லையா வருகின்ற ஜூலை 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசு, உள்துறை அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:

தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 61) பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி தப்பி விட்டார்.

அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விட்டார். இதன் காரணமாக அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தனது நிறுவன பங்குகளை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டாஜியோ நிறுவனத்திடம் விற்று கிடைத்த பணத்தில் 40 மில்லியன் டாலரை (சுமார் ரூ.260 கோடி), நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தனது மகன் சித்தார்த் மல்லையா, மகள்கள் லீனா மல்லையா, தான்யா மல்லையா ஆகியோருக்கு விஜய் மல்லையா மாற்றி, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார்.

இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மல்லையா குற்றவாளி என்றும், அவர் வருகின்ற ஜூலை 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 



மேலும், மல்லையா வருகின்ற ஜூலை 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியுள்ளது. 

அப்படி ஜூலை 10-ம் தேதி மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகும் பட்சத்தில் அவருக்கு நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் தண்டனை வழங்கப்படும் என்று தெரிகிறது. 
Tags:    

Similar News