செய்திகள்

டெல்லியில் விஷவாயு தாக்கி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி - நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

Published On 2017-05-06 21:58 GMT   |   Update On 2017-05-06 21:58 GMT
டெல்லியில் கன்டெய்னர் கிடங்கில் இருந்து கசிந்த விஷவாயு தாக்கி 450 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
புதுடெல்லி:

டெல்லியில் கன்டெய்னர் கிடங்கில் இருந்து கசிந்த விஷவாயு தாக்கி 450 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

டெல்லியின் தென்கிழக்கு பகுதியான துக்ளகாபாத்தில் சுங்க இலாகாவின் கன்டெய்னர் கிடங்கு அமைந்துள்ளது. அதன் அருகே ராணி ஜான்சி மகளிர் பள்ளி மற்றும் அரசு பெண்கள் பள்ளி என 2 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் நடைபெற இருந்த ஒரு தேர்வுக்காக நேற்று ஏராளமான மாணவிகள் வந்திருந்தனர்.

இந்த கன்டெய்னர் கிடங்கில் இருந்து காலை சுமார் 7.30 மணியளவில் திடீரென விஷவாயு கசிந்தது. இதை சுவாசித்த மாணவிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்பட்டன. இதனால் சுமார் 450 மாணவிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

இதுகுறித்து அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சுவாசக்கருவிகள் உள்ளிட்ட சிறப்பு தளவாடங்களுடன் ஏராளமான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் பேரிடர் மீட்புக்குழுவினரும் பள்ளிகளுக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் பள்ளிகளில் இருந்த மாணவிகளையும், ஆசிரியர்களையும் முதலில் அப்புறப்படுத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவிகளை மீட்டு அருகில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெரும்பாலான மாணவிகள் தங்கள் வீடு திரும்பினர்.

எனினும் சில மாணவிகள் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 மாணவிகள் அவசர சிகிச்சைப்பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுங்க இலாகாவின் கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த ஒரு கன்டெய்னரில் இருந்துதான் இந்த விஷவாயு கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த கன்டெய்னரில் இருந்த ரசாயன பொருளை எடுத்து அரியானாவுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே விஷவாயு தாக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து இருந்தார். அவருடன் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவும் சென்றார். இதைப்போல டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜாலும் மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிகளில் நேற்று நடக்க இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. 
Tags:    

Similar News