செய்திகள்

கணவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் ‘வெளுக்க’ மணமக்களுக்கு பேட் பரிசளித்த மந்திரி

Published On 2017-04-30 22:37 GMT   |   Update On 2017-04-30 22:37 GMT
மத்தியப்பிரதேசத்தில் குடித்துவிட்டு கணவன் வீட்டுக்கு வந்தால் மனைவி அடிப்பதற்காக புதிதாக திருமணமான மணமக்களுக்கு மரக்கட்டையால் ஆன பேட்டை பரிசாக மந்திரி ஒருவர் வழங்கியுள்ளார்.
போபால்:

மத்தியப்பிரதேசத்தில் அம்மாநில அரசின் சார்பில் சுமார் 700 ஜோடிகளுக்கு திருமணம் நேற்று நடைபெற்றது. இத்திருமணத்தில் பங்கேற்ற அம்மாநில மந்திரி கோபால் பார்கவா அனைத்து ஜோடிகளுக்கும் மரத்திலான சிறிய பேட் ஒன்றை பரிசாக வழங்கினார்.

அந்த பேட்டில் ” குடிப்பவர்களை அடிப்பதற்காக, போலீஸ் தலையிடக்கூடாது” என எழுதப்பட்டுள்ளது. இந்நிகழ்சியில் பேசிய கோபால் பார்கவா ,” குடித்துவிட்டு கணவன் வீட்டுக்கு வரும் போது இந்த கட்டைதான் பேச வேண்டும். குடும்பத் தலைவன் குடித்தால் அவன் வன்முறையாளனாக மாற வாய்ப்புள்ளது. எனவேம் மனைவிகள் அதை தடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

மேலும், 10,000 பேட்கள் தயார் செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் புதிதாக திருமணம் ஆகும் ஜோடிகளுக்கு விநியோகிக்க இருப்பதாகவும், பார்கவா தெரிவித்துள்ளார். மந்திரியின் இந்த விநோத செயல் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் குஜராத், பீகார், மிசோரம் மாநிலங்களில் முழுமையான மதுவிலக்கும், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் படிப்படியான மதுவிலக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News