செய்திகள்

திருப்பதியில் கூட்டம் அலைமோதல்: இலவச தரிசன பக்தர்களுக்கு புதிய காத்திருப்பு அறை

Published On 2017-04-29 06:03 GMT   |   Update On 2017-04-29 06:03 GMT
திருப்பதியில் பக்தர் கூட்டம் அலைமோதலால் இலவச தரிசன பக்தர்களுக்கு புதிய காத்திருப்பு அறையை கட்டிக்கொடுக்க அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
திருமலை:

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். பக்தர்களுக்குப் பொருட்கள் வைப்பறைகளைக் கூடுதலாக ஏற்படுத்தி கொடுப்பது பற்றி திருமலையில் உள்ள அன்னமயபவனில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் கலந்து கொண்டு பேசினார்.

கோடையையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். பக்தர்களின் பொருட்களை பாதுகாப்பாக வைக்க, திருமலையில் கூடுதலாக பொருட்கள் வைப்பறைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். விடுதி அறைகளை கட்டிக்கொடுக்கும் காணிக்கையாளர்கள் மேலாண்மைத் திட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அந்தத் திட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்யாண கட்டாக்களில் பயன்படுத்தப்படும் பிளேடுகள் மருத்துவக் கழிவுகளோடு கலக்கப்பட மாட்டாது. காணிக்கை தலைமுடி இறக்க பயன்படுத்தப்படும் பிளேடுகள் தனியாக சேகரிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. இலவச தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களுக்காக திருமலையில் உள்ள நாராயணகிரி பூங்காவில் மினி காம்ப்ளக்ஸ் ஒன்று மாடலாக கட்டப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை என்ஜினீயரிங் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News