செய்திகள்

என் மகளை கொன்றவனை தூக்கில் போடும் வரை போராடுவேன்: சவுமியா தாய் ஆவேசம்

Published On 2017-04-29 05:01 GMT   |   Update On 2017-04-29 05:01 GMT
எனது மகளை கொன்றவனை தூக்கில் போடும் வரை போராடுவேன், சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல் முறையீடு செய்வேன் என்று சவுமியாவின் தாய் கூறினார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகள் சவுமியா. இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி இரவு கொச்சி-சொர்னூர் பாசஞ்சர் ரெயில் மூலம் கொச்சிக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அவர் பயணம் செய்த ரெயில் பெட்டியில் திடீரென்று ஏறிய ஒரு வாலிபர் சவுமியா தனிமையில் இருப்பதை பார்த்து விபரீத எண்ணத்துடன் அவரை கற்பழிக்க முயன்றார். அவருடன் சவுமியா போராடியதால் அவரை கொடூரமாக தாக்கி கற்பழித்து விட்டு ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கோவிந்தசாமி தப்பி ஓடிவிட்டார்.

படுகாயத்துடன் ரெயில் தண்டவாளம் அருகே கிடந்த சவுமியா மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பிப்ரவரி மாதம் 6-ந்தேதி பரிதாபமாக இறந்துவிட்டார்.

கேரளாவை பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த கொடூர சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழகத்தின் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி வாலிபரான கோவிந்தசாமி என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் கோவிந்தசாமிக்கு தூக்குத் தண்டனை விதித்து கேரள ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து கோவிந்தசாமி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டில் அவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து சவுமியாவின் தாய் சுமதியும் கேரள அரசும் இந்த தண்டனை குறைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுமீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுக்களை தள்ளுபடி செய்தனர். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சரியானதுதான் என்று நீதிபதிகள் கூறி உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது சவுமியாவின் தாய் சுமதிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவர் ஆவேசத்துடன் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் எனது மகள் கொலை மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கொடூர கொலையாளிக்கு தூக்குத்தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். எனது மகள் சாவுக்கு மட்டும் அல்ல இதுபோல வேறு எந்த மகளுக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே நான் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனது மகளை கொன்றவனை தூக்கில் போடும் வரை போராடுவேன். சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல் முறையீடு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News