செய்திகள்

சீலிங் ஃபேன்களில் ஸ்பிரிங் மற்றும் ரகசிய சென்சார் - மாணவர்களின் தற்கொலையை தடுக்க புது திட்டம்

Published On 2017-03-30 11:00 GMT   |   Update On 2017-03-30 11:00 GMT
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள பயிற்சி மையங்களில் மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்காக விடுதி அறைகளில் உள்ள சீலிங் ஃபேன்களில் ஸ்பிரிங் மற்றும் ரகசிய சென்சார்கள் பொருத்தப்பட உள்ளதாக மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் கல்வி மையங்களுக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வு மற்றும் நீட் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மையங்கள் அதிகளவில் உள்ளது. நாடு முழுவதும் இருந்து ஆண்டுக்கு சுமார் 1.75 மாணவர்கள் இங்கு தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் சில சமயங்களில் மனமுடைந்து தங்களது விடுதி அறையில் உள்ள ஃபேன்களில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் 17 மாணவர்கள் இங்கு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதிகபட்சமாக 2014-ம் ஆண்டில் 45 மாணவர்கள் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தங்களது உயிர்களை மாய்த்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இதனால், இம்மாநில அரசு மாணவர்களின் தற்கொலையை தடுப்பது தொடர்பாக போதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியிருந்தது.



இந்நிலையில், அந்நகரில் உள்ள பயிற்சி மைய மாணவர்கள் விடுதி அறையில் உள்ள ஃபேன்களில் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதை தடுக்கும் விதமாக, ஃபேனில் ஸ்பிரிங் மற்றும் ரகசிய சென்சார் பொருத்தப்பட இருப்பதாக மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, 20 கிலோவுக்கு அதிகமான எடை பேனில் தொங்கும் போது ஸ்பிரிங் தானாக செயல்பட்டு பேனை கீழ் நோக்கி இழுத்துவிடும். மேலும், ரகசிய சென்சாரானது எடை அதிகமானவுடன் சைரன் மூலம் சப்தம் எழுப்பும். இந்த முறையால் மாணவர்களின் தற்கொலையை பெருமளவில் குறைக்கலாம் என மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பயோமெட்ரிக் வருகை பதிவேடு பொருத்தப்பட்டு மாணவர்களின் தினசரி வருகை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மாணவர் விடுப்பு எடுத்தால் அவரது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விடுதிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News