செய்திகள்

பாராளுமன்ற எம்.பி.க்களில் 443 பேர் கோடீசுவரர்கள்

Published On 2017-03-24 05:20 GMT   |   Update On 2017-03-24 05:20 GMT
பாராளுமன்ற எம்.பி.க்களில் 443 பேர் மிகப்பெரும் கோடீசுவரர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது 82 சதவீதம் எம்.பி.க்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
புதுடெல்லி:

எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்களுக்கு தற்போது ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு இதுபற்றி கூறுகையில், பாராளுமன்ற முன்னாள் எம்.பி.க்களில் 80 சதவீதம் பேர் கோடீசுவரர்களாக இருப்பதாக தெரிவித்தது.

இதையடுத்து எம்.பி.க்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் எழுந்துள்ளது. இதற்கிடையே தற்போது பாராளுமன்றத்தில் எம்.பி.க்களாக உள்ள 542 பேர் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.


அந்த ஆய்வில் 443 எம்.பி.க்கள் மிகப்பெரும் கோடீசுவரர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது 82 சதவீதம் எம்.பி.க்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

கோடீசுவர எம்.பி.க்களில் பா.ஜ.க.சபை சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். மொத்தம் உள்ள 281 பா.ஜ.க. எம்.பி.க்களில் 237 பேர் கோடீசுவரர்கள். காங்கிரஸ் கட்சியில் 44 எம்.பி.க்களில் 35 பேர் கோடீசுவரர்கள்.


அ.தி.மு.க.வில் மொத்தம் 37 எம்.பி.க்கள் மக்களவையில் உள்ளனர். இவர்களில் 29 பேர் கோடீசுவரர்கள். சிவசேனாவில் 17 பேரும், பிஜு ஜனதாதளத்தில் 14 பேரும், ஆம் ஆத்மியில் 4-ல் 3 பேரும் கோடீசுவரர்களாக உள்ளனர்.

தெலுங்குதேசம் (16), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (9), சமாஜ்வாடி (5), ராஷ்டீரிய ஜனதா தளம் (4) சிரோன் மணி அகாளிதளம் (4) ஆகிய கட்சிகளில் உள்ள எம்.பி.க்கள் அனைவரும் கோடீசுவரர்களாக உள்ளனர். இதனால் இந்த கட்சிகளின் பிரதிநிதிகள் 100 சதவீதம் நல்ல வசதிவாய்ப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் 9 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 3 பேர் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News