செய்திகள்

சிறையில் அடிக்கடி தியானம் செய்யும் சசிகலா

Published On 2017-02-20 06:10 GMT   |   Update On 2017-02-20 06:10 GMT
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ஜெயிலில் அடிக்கடி தியானம் செய்கிறார்.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவும் இளவரசியும் அடிக்கடி சிறை வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொள்கிறார்கள்.

அவருடன் பேசிய நேரம் போக அடிக்கடி சசிகலா தியானம் செய்கிறார். ஏற்கனவே அவர் தியானம் மற்றும் யோகா பயிற்சியும் பெற்று உள்ளார். இதனால் அவர் தனக்கு தியானம் செய்யவும், யோகா பயிற்சி மேற்கொள்ளவும் சிறை வளாகத்தில் தனி இடம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

தான் தங்கி இருக்கும் அறை அருகேயே அவர் தியானம் மற்றும் யோகா பயிற்சி மேற்கொள்ளலாம் என்று சிறை நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் சசிகலா தன் நெற்றியில் செந்தூரம் வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார். அதற்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

காலையில் சசிகலாவுக்கு இரண்டு தமிழ் பத்திரிகைகளும், இரண்டு ஆங்கில நாளிதழ்களும் வழங்கப்படுகிறது. அந்த பத்திரிகைகளில் தன்னை பற்றி வரும் செய்திகளை சசிகலா படிக்கிறார். பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள நூலகத்தில் அதிக அளவில் ஆங்கிலம் மற்றும் கன்னட புத்தகங்கள் தான் அதிக அளவில் உள்ளன.

இதனால் தன்னுடன் எடுத்து வந்த தமிழ் புத்தகங்களை படிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு சிறை நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. மேலும் அவர் உறவினர்கள் மற்றும் வக்கீல்கள் ஆகியோரை திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் சந்திக்கலாம். தான் சந்திக்கும் நபரை சசிகலா மட்டுமே முடிவு செய்ய வேண்டும். இதனால் சந்திக்க வரும் நபர்கள் குறித்து சிறை நிர்வாகம் சார்பில் எடுத்துரைக்கப்படுகிறது.

சசிகலா அனுமதி கிடைத்தவுடன் அவர்கள் சசிகலாவை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். வக்கீல்கள் செந்தில் அசோகன், பரணிகுமார், முரளிதர ராவ் ஆகியோர் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று சசிகலா அனுமதி கொடுத்து உள்ளார்.

இதனால் அவர்கள் தினமும் சசிகலாவை சந்தித்து வருகிறார்கள். இவர்கள் இன்று மீண்டும் சசிகலாவை சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் பெங்களூரு வந்து ஒரு தனியார் ஓட்டலில் தங்கி உள்ளார். அவர் இன்று அல்லது நாளை சசிகலாவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நாளை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெங்களூரு வருகிறார். அவர் சிறையில் சசிகலாவை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி இன்று சிறையில் சசிகலாவை சந்திப்பதாக இருந்தது.

இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றம் அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் துறை ரீதியான பணிகளை மேற்கொள்ள இருப்பதால் அவரது பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக ஒரு கருத்து உள்ளது.

மேலும் பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளுக்கு முதல்-வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு வசதி கிடையாது. இதனால் சாதாரண அறையில் தான் சசிகலாவும், இளவரசியும் அடைக்கப்பட்டு உள்ளனர். சுதாகரன் அதே வளாகத்தில் உள்ள ஆண்கள் பிரிவு சிறையில் சாதாரண அறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

Similar News