செய்திகள்

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் தடாலடி

Published On 2017-01-12 05:57 GMT   |   Update On 2017-01-12 15:18 GMT
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பை உடனடியாக வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஜனவரி 8-ந்தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.  

கோர்ட்டு உத்தரவின் பேரில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலிநாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதேபோல் தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்தேவும் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் மற்றும் அதன் பாரம்பரியத்தை விளக்கி வாதத்தை முன்வைத்தார்.

ஜல்லிக்கட்டில் மிருகவதை என்று கூறுவதை ஏற்க முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியும் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு  அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. குறிப்பாக மத்திய அரசு இதற்கான அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தால் தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டது.

இந்த பரபரபான சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பை உடனடியாக வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், வழக்கறிஞர்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. தீர்ப்பு தற்போது எழுதப்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த ஆண்டு சட்டப்பூர்வமாக ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு சாத்தியம் இல்லை.

உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இந்த கருத்து தனக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். பொங்கலுக்கு பிறகு தீர்ப்பு வந்தால் பயனில்லாமல் போகும் என்று கூறிய அவர், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு முழு ஆதரவையும் அளிப்பதாக கூறினார்.

Similar News