செய்திகள்

2,800 டன் செம்மரக்கட்டைகளை ஏலம் விட ஆந்திர அரசு ஏற்பாடு

Published On 2016-12-02 06:19 GMT   |   Update On 2016-12-02 06:19 GMT
2,800 டன் செம்மரக் கட்டைகளை டிசம்பர் மாதம் 14-ந் தேதி இணையதளத்தின் மூலம் ஏலம் விட ஆந்திர வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதி:

செம்மரக்கடத்தலைத் தடுக்க ஆந்திர வனத்துறை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், செம்மரக்கட்டை இணையதள ஏலத்தை நேரடியாக தொடங்கியது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஏலத்திற்கு கிடைத்த வரவேற்பு அடுத்து நடைபெற்ற மூன்றாம் கட்ட ஏலத்திற்கு கிடைக்கவில்லை.

இது குறித்து ஆய்வு நடத்த வனத்துறை அதிகாரிகள் சீனாவுக்குச் சென்றனர். இதில் அரசு நடத்தும் ஏலம் மூலம் செம்மரக்கட்டைகளை வாங்கினால் ஏற்றுமதி, இறக்குமதி வரி, அரசு விதிக்கும் நிபந்தனைகளின் கெடுபிடி அதிகம் இருக்கும் என கடத்தல் காரர்கள் நேரடியாக வியாபாரிகளிடம் கூறி வருகின்றனர்.

அரசிடம் வாங்குவதைக் காட்டிலும் நேரடியாக வியாபாரிகளின் கிடங்குக்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சென்று உயர்ரக செம்மரக்கட்டைகளை குறைந்த விலைக்கு கொண்டு வந்து சேர்ப்பதாக உறுதி அளித்து வருகின்றனர்.

அதனால் சீனா, ஹாங்காங், தைவானில் உள்ள நிறுவனங்களுடன் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அரசின் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஏலத்திற்கு செலுத்தும் இ.எம்.டி. தொகை ரூ.3.50 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறினர்.

அதனால் வரும் டிசம்பர் மாதம் மீண்டும் 2,800 டன் செம்மரக்கட்டைகளை இணையதள ஏலம் மூலம் விற்பனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் ரூபாய் நோட்டு ரத்து விவகாரத்தால் இதில் பிரச்சனை ஏற்படுமோ என்ற குழப்பத்தில் தற்போது அதிகாரிகள் ஆழ்ந்துள்ளனர்.

Similar News