இந்தியா

டெல்லி: பெயின்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 11 பேர் உடல் கருகி பலி

Published On 2024-02-16 03:28 GMT   |   Update On 2024-02-16 07:03 GMT
  • பெயின்ட் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
  • ரசாயனப் பொருட்கள் தீ விபத்தால் வெடித்து சிதறியதால் கட்டடம் இடிந்து விழுந்தது.

டெல்லி மாநிலம் அலிபுர் தயால்பூர் மார்க்கெட்டில் உள்ள பெயின்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பெயின்ட் தொழிற்சாலையில் ரசாயனப் பொருட்கள் இருந்ததால் வெடித்து சிதறின. இதனால் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் மூலம் வீரர்கள் தீயை அணைத்தனர். பல மணி நேரம் போராடி வீரர்கள் தீயை அணைத்தனர்.

அதற்குள் 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணியில் ஈடுட்ட போலீசார் உள்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர். இன்னும் இரண்டு பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

"தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கும் பரவியது. ரசாயன பொருட்கள் வெடித்ததில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 11 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் முழுவதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம்" என டெல்லி தீயணைப்பு சர்வீஸ் இயக்குனர் அதுல் கார்க் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News