உள்ளூர் செய்திகள்

திருச்சியில் கொளுத்திய வெயிலுக்கு இடையே குளிர்வித்த 'திடீர்' கோடை மழை

Published On 2022-08-18 09:58 GMT   |   Update On 2022-08-18 09:58 GMT
  • திருச்சி மாவட்டத்தில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது
  • கோடை கால வெப்பம் இருந்ததால் அதிக புழுக்கமும் காணப்பட்டது.

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கோடை கால வெப்பம் இருந்ததால் அதிக புழுக்கமும் காணப்பட்டது.

இதனால் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் திருச்சி மாநகரில் கனமழை கொட்டியது. கருமண்டபம் பகுதியில் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வேலைகளுக்கு சென்று வீடு திரும்பிய மக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

இதேபோன்று மணப்பாறை பகுதியில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நேற்றைய மழையில் அதிகபட்சமாக மணப்பாறையில் 32.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

முக்கொம்பு மேணை-14.4, புள்ளம்பாடி-2.8, திருச்சி ஏர்போர்ட்-3.7, திருச்சி டவுன்-12, முசிறி-10, பொன்னணியாறு அணை பகுதி-4.6.

நேற்று பெய்த மழையின் சுவடு கூட தெரியாத அளவுக்கு இன்று பகலில் கடுமையான வெயில் வாட்டி எடுத்த போதிலும் நேற்று பெய்த மழையால் மக்கள் சற்றே மகிழ்ச்சி மனநிலையை அடைந்தனர்.

Tags:    

Similar News