உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் சொத்து தகராறில் மாமனாரை கொலை செய்த மருமகன்

Published On 2022-07-29 04:56 GMT   |   Update On 2022-07-29 04:56 GMT
  • புதுக்கோட்டை வ.உ.சி. நகர் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • சிம்சோன் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை வ.உ.சி. நகர் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிவன் கோவில் பகுதியில் உள்ள கிணற்றின் அருகே ஒருவர் காரில் இருந்து ஒரு சாக்குமூட்டையை இறக்கி கொண்டிருந்தார். போலீசை பார்த்தவுடன் அவர் தப்பி சென்றுவிட்டார். போலீசார் அந்த மூட்டையை கைப்பற்றி சோதனை செய்த போது அதில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் எஸ்.பி. சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி. லயோலா மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்டவர் சாயர்புரத்தை சேர்ந்த சிம்சோன் (வயது75) என்பது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவரை கொலை செய்த மர்மநபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்த புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் அன்பரசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. கொலை செய்யப்பட்ட சிம்சோன் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் பிலசி என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்களத்தை சேர்ந்த முருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் முருகன், மாமனார் சிம்சோனிடம் சொத்தை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மே மாதம் சொத்து தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது சிம்சோனை, முருகன் தாக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் சாயர்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் சொத்து தொடர்பாக சிம்சோனிடம் முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த முருகன் அவரை தாக்கி, கத்தியால் குத்தினார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரை சாக்குமூட்டையில் கட்டிய முருகன் காரில் எடுத்து சென்று புதுக்கோட்டையில் உள்ள ஒரு மொட்டை கிணற்றில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முடிவு செய்தார். ஆனால் போலீசார் அங்கு வந்ததை பார்த்ததும் அவர் தப்பி சென்றுவிட்டார்.

தப்பி ஓடிய முருகனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News