உள்ளூர் செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30 வரை இலவசமாக போடப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Published On 2022-07-24 09:52 GMT   |   Update On 2022-07-24 14:05 GMT
  • தகுதியான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
  • அதற்காக இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய-மாநில அரசு பங்களிப்புடன் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகின்றன.

இதில் 18 முதல் 59 வயது வரை உள்ளோர், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி, தடுப்பூசி போட வேண்டிய நிலை இருந்தது.

இதற்கிடையே 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் செப்டம்பர் 30-ந்தேதி வரை இலவசமாக 'பூஸ்டர் டோஸ்' போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இன்று ஏற்கனவே அறிவித்தபடி தமிழகத்தில் 32-வது மெகா தடுப்பூசி முகாமை, தமிழக அரசு நடத்துகிறது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில், நிலையான முகாம் மற்றும் நடமாடும் முகாம் என்ற அடிப்படையில் முகாம்கள் நடத்தப்பட்டன.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி போடப்பட உள்ளது. இதில், முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை போடாத 1.5 கோடி பேர் மற்றும் பூஸ்டர் டோஸ் போடாத 3.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தகுதியான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தகுதியான அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த 75 நாட்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக போடாவிட்டால் பிறகு கட்டணம் செலுத்தியே போட வேண்டும்.

உலகில் 63 நாடுகளில் வேகமாக பரவும் குரங்கம்மை நோய் தொற்று தமிழகத்தில் இதுவரை ஏற்படவில்லை. அண்டை மாநிலமான கேரளாவில் பரவ தொடங்கி இருப்பதால் கேரளாவையும், தமிழகத்தையும் இணைக்கும் 13 வழித்தடங்களில் தீவிர கண்காணிப்பு நடக்கிறது. நடந்தும், வாகனங்களில் வருபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். குரங்கம்மை அறிகுறி ஏதாவது தெரிகிறதா? என்று கண்டறிந்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதுவரை தமிழகத்தில் பாதிப்பு இல்லை. நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சுகாதாரத்துறையை சேர்ந்த 344 பேர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News