உள்ளூர் செய்திகள்

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி- அ.தி.மு.க. பெண் பிரமுகர் கைது

Published On 2022-07-19 09:43 GMT   |   Update On 2022-07-19 09:43 GMT
  • 2 ஆண்டுகளை கடந்தும் வீடு கட்டும் பணி முடியவில்லை என்று கூறி பிரேமா தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார்.
  • சந்தேகமடைந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் கட்டிட பணி நடைபெற்று வந்த அயப்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரிக்கு நேரில் சென்று விசாரித்தனர்.

போரூர்:

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் கார்பென்டர்.

இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் அதே பகுதி சோழன் நகரை சேர்ந்த பிரேமா என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகமானார்.

அப்போது தனக்கு குடிசை மாற்று வாரியத்தில் உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் மூலம் உடனடியாக வீடு ஒதுக்கீடு பெற்று தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார்.

இதை உண்மை என்று நம்பிய மணிகண்டன் தனது நண்பர்கள் 9பேர் உள்பட மொத்தம் 11பேருக்கு வீடு வேண்டும் என்று கேட்டு பிரேமாவை அணுகினார். அப்போது அயப்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய 2 இடங்களில் வீடு ஒதுக்கீடு பெற்று தருகிறேன் என்று கூறிய பிரேமா அவர்களிடம் இருந்து தலா ரூ.2லட்சம் வீதம் ரூ.22லட்சம் பணத்தையும் பெற்றுக் கொண்டார்.

ஆனால் 2 ஆண்டுகளை கடந்தும் வீடு கட்டும் பணி முடியவில்லை என்று கூறி பிரேமா தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். இதனால் சந்தேகமடைந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் கட்டிட பணி நடைபெற்று வந்த அயப்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரிக்கு நேரில் சென்று விசாரித்தனர். அப்போது போலியான ஆவணங்கள் மூலம் ஒப்பந்தம் போட்டு பிரேமா ரூ.22லட்சம் பணத்தை சுருட்டி நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மணிகண்டன் உள்ளிட்ட 11பேரும் மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரேமாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட பிரேமா மதுரவாயல் பகுதி அதிமுக மகளிரணி செயலாளர் என்பதும் இதுபோன்று மேலும் பலரிடம் ஆசைவார்த்தை கூறி பிரேமா ரூ.40லட்சம் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News