உள்ளூர் செய்திகள்

மரத்தடி நிழலில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள். பணிகள் நடைபெறாமல் உள்ள வகுப்பறைகள்,

பொல்லிகாளிபாளையம் அரசு பள்ளியில் வகுப்பறை வசதி இல்லாததால் மரத்தடி நிழலில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

Update: 2022-06-25 10:43 GMT
  • பள்ளியின் வழித்தடம் ஆனது மோசமாக உள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
  • பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் வகுப்பறைக்காக 5 வருடங்களாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் பொல்லிகாளிபாளையம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி இரண்டும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளியில் 406 பேரும், மேல்நிலைப் பள்ளியில் 864 பேரும் என 1,200 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சுற்று வட்டாரங்களில் உள்ள 15 கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த பள்ளிகளில் பயிலும் நிலையில் மேல்நிலை பள்ளிக்கு 8 வகுப்பறைகளும், தொடக்கப்பள்ளிக்கு 1 வகுப்பறை என 9 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது.

தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் கூரை பழுதடைந்த நிலையில் ஓடுகள் மாற்றும் பணி கடந்த 6 மாதமாக நடைபெற்று வருவதால் மாணவர்களை அமரவைத்து பாடம் எடுக்க வகுப்பறை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேப்போல் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 24 வகுப்புகள் உள்ளதாகவும் ஆனால் தற்போது 8 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதாகவும், 2017ம் ஆண்டு 10 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணி துவங்கிய நிலையில் தற்போது வரை முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் வகுப்பறைக்காக 5 வருடங்களாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் மாணவர்களை மரத்தடி நிழலிலும், பள்ளி கலையரங்கம் நிழலிலும் அமர வைத்து ஆசிரியர்கள் பாடமெடுத்து வருகின்றனர். அதே போல் ஒரு வகுப்பறையில் இரண்டு , மூன்று வகுப்பு மாணவர்களை அமரவைத்தும் பாடம் நடத்தி வருகின்றனர்.

எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர், பள்ளி கல்வித்துறை அதிகாரி என பலரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இதே நிலை நீடித்து வருவதாகவும் அதிகாரிகளின் கண்டுகொள்ளாத போக்கை கண்டித்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மாணவ மாணவிகளின் பெற்றோர் பள்ளி முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாரின் சமரசத்தை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பின் கைவிடப்பட்டது.

அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற அரசு பள்ளிகளில் நிலவும் நிலை பெற்றோர்கள்மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனியும் காலம் கடத்தாமல் பள்ளி வகுப்பறைகளை முழுமையாக கட்டி முடித்து உடனடியாக மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவ மாணவிகள் சிரமப்படுகின்றனர். அதேபோல் பள்ளியின் வழித்தடம் ஆனது மோசமாக உள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே மாணவ மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் மற்றும் வழித்தடம் ஆகியவற்றை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,இந்தப்பணியானது பொதுப்பணித்துறை மற்றும் நபார்டு திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த சில வருடங்களாக பணி நடைபெறாமல் இருந்துள்ளது. விரைவில் பள்ளி கட்டிடம் பணி முடிக்கப்படும் என்றனர்.   

Tags:    

Similar News