உள்ளூர் செய்திகள்

1432 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-08-21 08:22 GMT   |   Update On 2022-08-21 08:22 GMT
  • 1432 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
  • வரிசையாக நின்று, தடுப்பூசி போட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

மதுரை

தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவுகிறது. மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் நோய் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. மதுரையில் நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாநகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் உள்ள 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. அது இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி நடந்து வருகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் இன்று 1432 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. 1600 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இரவு 7 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

மதுரை மாவட்டத்தில் முதல் டோஸ்- 87 சதவீதம் பேரும், 2-வது டோஸ்- 77 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். பூஸ்டர் டோஸ் ஆக 3 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது என்றார்.

மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் இல்லை. சில பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோர் வரிசையாக நின்று, தடுப்பூசி போட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

Tags:    

Similar News