உள்ளூர் செய்திகள்

பசும்பொன் பாண்டியன்

அமைச்சர் கார் மீது செருப்பு வீசி கைதான பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை

Published On 2022-08-17 08:17 GMT   |   Update On 2022-08-17 08:17 GMT
  • அமைச்சர் கார் மீது செருப்பு வீசி கைதான பா.ஜ.க.வினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அ.இ.ம.மு.க. பொதுச்செயலாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது செருப்பு வீசியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் புலிகள் அமைப்பின் சார்பில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நாகை திருவள்ளுவன், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் பசும்பொன் பாண்டியன் பேசியதாவது:-

திராவிட இயக்க அரசியலுக்கும், செருப்பு வீசியவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெரியார் மீது வீசாத செருப்புகளா?. எதிரி களையும் அரவணைத்து செல்லும் மனப்பாண்மை கொண்டதுதான் திராவிட அரசியல். ஆர்.எஸ். எஸ். மற்றும் சனாதன அமைப்புகள் நாட்டின் இறையாண்மைக்கும், தேச பாதுகாப்புக்கும் தொடர்ந்து குந்தகம் இழைத்து வருகி றார்கள். நாட்டில் மக்கள் அமைதியாக வாழ்வதை விரும்பாதவர்கள் சனாதனவாதிகள்.

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் தமிழர்களுக்கு மான பிரச்சினையாக உள்ளது. செருப்பை வீசியவர்களுக்கு செருப்பால்தான் பதில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் பண்பாளர். அவர் நாகரிகமாக நடந்து கொண்டார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செருப்பு வீச்சு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காமல் அதனை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.

மதுரை மண்ணில் பல்வேறு அரசியல் ஏற்றத்தாழ்வுகள் நடந்துள்ளன, முள்ளை முள்ளால் எடுப்போம் என்பது போல பா.ஜ.க.வினருக்கு அவர்கள் வீசிய செருப்பாலே பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

செருப்பு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்ப ட்டுள்ள பா.ஜ.க.வினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் அமைச்சரின் காரில் கட்டப்பட்டிருந்த தேசிய கொடியையும் அவர்கள் அவமதித்துள்ளனர்.

பதவி விலகிய பா.ஜ.க. மாவட்ட தலைவர் பா.ஜ.க.வின் முகத்திரையை கிழித்து காட்டியுள்ளார். தமிழ்நாடு திராவிட மண் என்பதற்கு அவரது வாக்குமூலமே சாட்சியாக இருக்கிறது.

சிறுபான்மையினருக்கு எதிராக, மத கலவரத்தை தூண்டக்கூடிய, மக்களுக்கு உதவாத இயக்கம் பா.ஜ.க. என்பதற்கு அந்த கட்சியின் மாவட்ட தலைவரே சான்றிதழ் வழங்கி உள்ளார்.

இனியாவது தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த அரசியலை செய்ய வேண்டும். மீறினால் பா.ஜ.க.வினர் ஒருவர் கூட வீதியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News