தமிழ்நாடு

'உபா' சட்டத்தில் நடவடிக்கை- பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட 3 பேர் கைது

Published On 2024-05-25 08:31 GMT   |   Update On 2024-05-25 08:31 GMT
  • கைது செய்யப்பட்ட 3 பேரும் தெரிவித்த கருத்துக்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ராயப்பேட்டை பகுதியில் 3 பேர் செயல்பட்டு வருவதாக சென்னை மாநகர போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ராயப்பேட்டை பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது "ஹிஸ்ப் உத் தகீர்" என்ற பெயரிலான பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ராயப்பேட்டையை சேர்ந்த டாக்டர் அமீது உசேன், அவரது தந்தை அகமது அன்சூர், தம்பி அப்துல்ரகுமான் ஆகியோர் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சைபர் கிரைம் போலீசார் 3 பேரையும் வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில் 3 பேரும் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது யூடியூப் சேனல் மூலமாக பயங்கரவாத இயக்கம் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு பிரசாரம் செய்து ஆட்களை சேர்த்து வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் போலீசில் சிக்கியது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகரில் சமூக வலைதளங்களில் மோதலை தூண்டும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப்பில் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருவதை கண்டுபிடித்தனர். அப்போது ஹிஸ்ப் உத் தகிர் என்கிற பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து டாக்டர் ஹமீது உசேன் பரப்பியது தெரிய வந்தது.

இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். 3 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்துள்ளது.

சென்னை போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உலகம் முழுவதுமே "கிலாபத்" என்கிற இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரும் வகையில் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் தெரிவித்த கருத்துக்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News