உள்ளூர் செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் முழு வீச்சில் நடைபெறும் கும்பாபிஷேக பணிகள்

Published On 2022-06-27 08:35 GMT   |   Update On 2022-06-27 08:35 GMT
  • பல்வேறு வேலைகள் முழுவீச்சில் நடந்து பெரும்பாலானவை நிறைவடைந்து விட்டது
  • சுமார் 8 கிலோ எடை கொண்ட ஐம்பொன் உலோகத்தில் கருடாழ்வார் உருவம் வார்த்தெடுக்கப்பட்டது

கன்னியாகுமரி :

வரும் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கொடிமரத்தில் பொருத்தப்பட வேண்டிய தங்கமுலாம் பூசப்பட்ட கொடி மர கவசங்கள் மற்றும் கொடிமரத்தின் உச்சியில் பொருத்தப்பட வேண்டிய கருடாழ்வார் சிலை மணி ஆகியன தயார் நிலையில் உள்ளது.

418 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் ஜூலை மாதம் 6-ந்தேதி திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்காக கோவிலில் மூலவரின் கடுசர்க்கரை யோக சிலை புதுப்பிக்கும் பணி, மியூரல் ஓவியங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும்பணி, கோவில் விமானங்கள் சரி செய்யும்பணி, விளக்கணி மாடங்கள் சரிசெய்யும் பண்டு உட்பட பல்வேறு வேலைகள் முழுவீச்சில் நடந்து பெரும்பாலானவை நிறைவடைந்து விட்டது.

லட்ச தீப விழாவின் போது கோவில் விளக்கணி மாடத்தில் உள்ள தேக்குச்சட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வேப்பெண்ணெய் மற்றும் மூலிகை எண்ணைகலந்து தேக்குமரச்சட்டங்களில் நேற்று பூசப்பட்டது.

2017-ம் ஆண்டு கேரள மாநிலம் கோன்னி வனத்தில் இருந்து 70 அடி நீளமுள்ள தேக்கு மரம் பிரமாண்ட வாகனத்தில் திருவட்டாறுக்கு கொண்டு வரப்பட்டு மூலிகை எண்ணெய்த்தொட்டியில் வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொடி மரம் நிறுவப்பட்டது.

இந்த கொடி மரத்தில் பொருத்துவதற்காக செம்புக்கவசங்கள் தங்கமுலாம் பூசும் பணி சென்னையில் நடந்தது. கொடிமர கவச முலாம் பூசும் பணிகள் மற்றும் கருட வாகனம் ஆகிய பணிகளை மேற்கொண்ட கேரளாவைச்சேர்ந்த சிற்பி பத்தியூர் வினோத் பாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கேரளா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் நான் பல்வேறு கோவில்களில் கொடிமரங்கள் தொடர்பான வேலைகள் செய்துள்ளேன். கன்னியா குமரி மாவட்டத்திலும் பல கோவில்களில் வேலைகள் நடத்தி உள்ளேன். சபரிமலை ஐயப்பசாமி கோவில் கொடிமர பிரதிஷ்டைக்காக அதை வடிவமைத்து கொடுத்துள்ளேன். தற்போது திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் நிறுவப்பட்டுள்ள கொடிமரத்தில் பொருத்தப்பட உள்ள செம்புக்கவசங்களில் தங்கமுலாம் பூசும்பணி முடிவடைந்து விட்டது. கொடி மரத்தின் உச்சியில் உள்ள சம்மணமிட்டு உட்காந்த நிலையில் உள்ள கருடாழ்வார் சிலை பொருத்தப்பட உள்ளது. இதற்காக சுமார் 8 கிலோ எடை கொண்ட ஐம்பொன் உலோகத்தில் கருடாழ்வார் உருவம் வார்த்தெடுக்கப்பட்டது. தற்போது அதன்மீது தங்கமுலாம் பூசும் பணி முடிவடைது விட்டது மட்டுமல்லாமல் கருடாழ் வாருடன் சுமார் அரைக்கிலோ எடையில் ஐம்பொன்னில் வார்த்தெடுக்கப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட இரு மணிகளும் பொருத்தப்பட உள்ளன. இதற்கான வேலைகள் அறநிலையத்துறையின் உத்தரவின் படி விரைவில் துவங்கும்" என்றார்.

நேற்று கோவிலில் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராம் சாமி தரிசனம் செய்தார்.

நேற்று கும்பாபிஷேகத்துக்காக கோவில் விமானம் மற்றும் உதயமார்த்தாண்ட மண்டபத்தின் உச்சியில் சாரம் அமைக்கும்பணிகள் நடந்தது.

இன்று மாலை கோவிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ஒலி, ஒளி அமைப்புகள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 28.ம்தேதி முதல் செயல்படத்துவங்கும்.

தற்போது கோவிலில் நான்கு பிரகாரங்களிலும் நான்கு டி.எஸ்.பி.யின் கண்காணிப்பில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பார்கள். பக்தர்கள் எந்த வித அச்சமும் இன்றி கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News