உள்ளூர் செய்திகள்

கலால் வரியை விதித்து பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்துகிறது - குளச்சலில் சுப வீரபாண்டியன் பேச்சு

Published On 2022-07-25 07:31 GMT   |   Update On 2022-07-25 07:31 GMT
  • மத நல்லிணக்கத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது
  • தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்வோம்

கன்னியாகுமரி :

கன்னியாகுமாரி மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் வகையில் திராவிட நட்பு கழக அறிமுக கூட்டம் குளச்சல் புனித காணிக்கை மாதா மண்டபத்தில் மைக்கேல் ஜோஸ் தலைமையில் நடந்தது.

திராவிடர் இயக்க தமிழர் பேரவை துணை பொதுச்செயலாளர் சிங்கராயர், கிழக்கு மாவட்ட செயலாளர் விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் நட்பு கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

மத நல்லிணக்கத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் வலிமையான கட்சி. எங்கள் கொள்கை சமூக நீதி, ஜனநாயகம், மத நல்லிணக்கம். நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத வர்கள் தான். அதற்காக கோவில்களை இடிக்கவில்லை.

பெட்ரோல், விலை, சமையல் கேஸ் விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. 1947 ல் பெட்ரோல் விலை 27 காசுகள் மட்டும்தான். பின்னர் 40 வருடங்கள் கழித்துதான் ரூ.10 உயர்ந்தது.2013 ல் ஒரு பேரல் கச்சா மூலப்பொருள் ரூ.140 ஆக இருந்தபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72 தான். 2015, 2016 ல் கச்சா விலை ரூ.47 ஆனது.அப்போது ரூ.30 குறைத்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு கலால் வரி போட்டு பெட்ரோல் விலையை உயர்த்தியது. மன்மோகன் சிங் பிரதமர் பதவியிலிருந்து இறங்கும் போது சமையல் கேஸ் விலை ரூ.410 ஆக இருந்தது.அப்போது ரூ.210 மானியம் வழங்கப்பட்டது.

அதன்பின் வந்த பாரதிய ஜனதா மானியத்தை வங்கி கணக்கில் போடும் என்றது. ஆனால் ரூ.14 தான் வங்கியில் போட்டது.அதையும் இப்போது போடுவதாக தெரிய வில்லை. பாரதிய ஜனதா கடவுள், மதத்தைப்பற்றி பேசிதான் ஆட்சிக்கு வருகிறது. எங்களுக்கு அதுவல்ல பிரச்சினை. சமூக நீதி, ஜனநாயகம், மத நல்லிணக்கம் வேண்டும்.அதற்காகக்தான் நாங்கள் தி.மு.க.வுக்கு துணை நிற்கிறோம்.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்வோம் என கூறியது. மீனவர்களின் பிரச்சினைகளை முதல்வரிடம் கொண்டு செல்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News