உள்ளூர் செய்திகள்

உலக நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்கும் இடத்தை அடைய வேண்டும்: கவர்னர் ஆர்.என்.ரவி

Published On 2022-08-15 02:29 GMT   |   Update On 2022-08-15 02:29 GMT
  • நமது மனித வளர்ச்சி குறியீடு இந்தியாவிலேயே மிகச்சிறந்ததாக உள்ளது.
  • தமிழகத்தின் எழுச்சி என்பது இந்தியாவின் எழுச்சி.

சென்னை :

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியில் கூறியிருப்பதாவது:-

75-ம் ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவை இந்தியா சிறப்பான முறையில் கொண்டாடி வரும் இந்த வேளையில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கொரோனா தொற்று உலக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்த போதும் அதில் இருந்து மீண்ட இந்தியா சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், புதிய கண்டுபிடிப்பாளர்களால் உலகில் மிக வேகமாக வளர்ந்து பொருளாதாரத்தை கொண்ட முதல் 3 நாடுகளில் இந்தியா இடம்பெற்றது. இந்தியாவில் சிறந்த முறையில் செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, தொழில் மயமாக்கல் போன்றவற்றில் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.

நமது மனித வளர்ச்சி குறியீடு இந்தியாவிலேயே மிகச்சிறந்ததாக உள்ளது. இந்த சாதனை மிக திருப்திகரமான ஒன்றாகும். தமிழகத்தின் எழுச்சி என்பது இந்தியாவின் எழுச்சி. நமது பலம், பலவீனத்தை அடையாளம் கண்டு நம்மை செம்மைப்படுத்த வேண்டும்.

நமது மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் சமநிலை, சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை கடக்க வேண்டும்

நமது மாநிலத்தின் சில பகுதிகளில் தீண்டாமை என்ற கறை இருந்து வருகிறது. இது நாகரீக சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தீண்டாமை எனப்படும் மனிதாபிமானமற்ற, வெட்கக்கேடான செயலை ஒழிக்க வேண்டும்.

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழகத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முதலீடுகள் தேவைப்படுகிறது.

தமிழகத்தை ஒட்டி உள்ள சில மாநிலங்கள் நமது மாநிலத்தை விட பல மடங்கு முதலீடுகளை ஈர்க்கிறது. இதற்கான காரணத்தை கண்டறிந்து நமது மாநிலமும் முதலீடுகளை ஈர்க்க தேவையானவற்றை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

2047-ம் ஆண்டு சுதந்திர தின நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் இந்தியா உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் இடத்தை அடைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News