உள்ளூர் செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே தகராறு; போலீசார் குவிப்பு

Published On 2022-08-10 09:56 GMT   |   Update On 2022-08-10 09:56 GMT
  • கறி சாப்பாடு வினியோகித்ததில் இரு தரப்புக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
  • கலவரம் ஏற்பட்டால் தடுக்கும் வகையில் தண்ணீரை பீச்சியடிக்கும் வஜ்ரா வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டது.

திருவாரூர்:

கொரடாச்சேரியில் கோவில் கிடா வெட்டு பூஜை கறி சாப்பாடு விநியோகத்தில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றிய விவரம் வருமாறு, கொரடாச்சேரி முனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன் பூஜை செய்துள்ளனர். அப்போது ஆட்டுக்கிடா வெட்டி வழிபாடு நடத்தியுள்ளனர். மேலும் கறி சாப்பாடு செய்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொது மக்களுக்கும் வழங்கியுள்ளனர். அப்போது கறி சாப்பாடு வினியோகித்ததில் இரு தரப்புக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பின் ஆதரவாளர்களும் கொரடாச்சேரி பகுதியில் திரண்டுள்ளனர்.

இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இருதரப்பையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக மீண்டும் தகராறு வந்துவிடக் கூடாது என, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்திலிருந்து திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி பகுதிகளைச் சேர்ந்த போலீசார் மற்றும் திருவாரூர் ஆயுதப்படை போலீசார் என நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கொரடாச்சேரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கலவரம் ஏற்பட்டால் தடுக்கும் வகையில் தண்ணீரை பீச்சியடிக்கும் வஜ்ரா வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதும், வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News