உள்ளூர் செய்திகள்
ஜி.கே.வாசன்

சொத்து வரியை உயர்த்துவது மக்கள் விரோத போக்கு- ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

Published On 2022-06-03 09:33 GMT   |   Update On 2022-06-03 11:20 GMT
தமிழகத்தில் மட்டும் கல்வியை அரசியல் ஆக்குவது ஒருபோதும் ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சிபுரத்தில் நடந்த கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு ஆண்டுக் கால தி.மு.க. ஆட்சியிலே எதிர்பார்த்த மக்கள் இன்றைக்கு ஏமாந்து போய் இருப்பது வருத்தத்துக்குரியது, கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக தி.மு.க. செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது,

தமிழகத்தில் மட்டும் கல்வியை அரசியல் ஆக்குவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. புதிய கல்விக் கொள்கையில் ஏற்படும் சந்தேகங்களை விளக்க மத்திய அரசு இருக்கும் போது, இதனை முறையாக எடுத்துக் கொண்டு சென்று சந்தேகங்களை தீர்க்க வேண்டியது அரசின் கடமை.

இந்த புதிய கல்விக் கொள்கையைப் பற்றி தமிழக அரசு பல ஆலோசனைகளை கூறலாம். ஆனால் எதையும் செய்யாமல் கண்மூடித்தனமாக இதனை எதிர்ப்பது ஏற்புடையதல்ல. கல்வியிலே அரசியலை புகட்டுவது பெற்றோர்களும் மாணவர்களும் 100 சதவிகிதம் ஏற்புடையதல்ல.

மக்கள் நலனிலே அக்கறைக்கொண்ட ஆட்சியாளர்களாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைத்து, மக்கள் மீது உள்ள சுமையை மத்திய அரசு குறைத்து வருகிறது. இனிவரும் நாட்களிலும் மத்திய அரசு விலையினை குறைக்கும்.

ஆனால் தி.மு.க. அரசு பெட்ரோல்-டீசல், கேஸ் விலையை குறைக்க மாட்டோம், சொத்து வரியை உறுதியாக உயர்த்துவோம் என சொல்லுவது மட்டுமல்லாமல், ஆண்டுக்கு ஒரு முறை சொத்துவரியினை உயர்த்துவோம் என கூறுவது மக்கள் விரோதபோக்கு.

மேலும் மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News