உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

போக்குவரத்து நெரிசலை தீர்க்க அனுப்பர்பாளையத்தில் சிக்னல் அமைக்கும் பணி தீவிரம்

Published On 2022-05-22 10:33 GMT   |   Update On 2022-05-22 10:33 GMT
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல் அமைத்து பயன்பாட்டில் உள்ளது.

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் - அவிநாசி ரோடு தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. சேலம் - கொச்சி, கோவை - திருச்சி ஆகிய 2 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கிறது. திருப்பூரை ஒட்டி அமைந்துள்ள அவிநாசி, பூண்டி பகுதிக்கும், அவிநாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய ரோடாகவும் இந்த ரோடு உள்ளது.

நகரின் முக்கிய பகுதிகள் அடங்கிய பகுதியாக உள்ளதால் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். அதற்கேற்ப போக்குவரத்து நெரிசலும் உள்ளது. போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல் அமைத்து பயன்பாட்டில் உள்ளது.

இந்த சாலையில் அனுப்பர்பாளையத்திலிருந்து வேலம்பாளையம் சாலை மற்றும் அங்கேரிபாளையம் சாலை ஆகியன பிரியும் முக்கிய சந்திப்பு உள்ளது. இங்கு இரு சாலைகளும் சந்திக்கும் இடம் பல மீட்டர் தள்ளி அமைந்துள்ளது.இதனால் மும்முனை சந்திப்பாகவும் இல்லாமல் நான்கு முனை சந்திப்பாகவும் இல்லாமல் வாகன போக்குவரத்தை சீர்படுத்த போக்குவரத்து போலீசார் திணறினர்.

இதனால் காலை மற்றும் மாலை வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.இதற்கு தீர்வு காணும் வகையில், தற்போது சிக்னல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. விரைவில் மின் இணைப்பு வழங்கி, சிக்னல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. அதன் பின் இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும் என போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News