உள்ளூர் செய்திகள்
ஜிகே வாசன்

பேரறிவாளன் விடுதலை விவகாரம்: காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டில் தவிப்பது ஏன்? ஜி.கே.வாசன் கேள்வி

Published On 2022-05-20 05:38 GMT   |   Update On 2022-05-20 07:13 GMT
காங்கிரஸ் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் இந்த பிரச்சினையில் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது பதவி நலனுக்காகவா? அல்லது சுயநலனுக்காகவா? அல்லது கூட்டணி நலனுக்காகவா? என்று தெரியவில்லை என ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

பேரறிவாளனின் விடுதலை விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை சம்பவத்தில் அவருடன் சேர்த்து 17 பேர்கள், குறிப்பாக காவல்துறை அதிகாரிகளும், காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை, மனநிலையை தமிழகத்தை ஆளும், ஆட்சியும், கட்சியும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகளும் உணர்ந்து செயல்படவேண்டும். காரணம் சிறையில் உள்ள மற்ற 6 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளும் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்களின் எண்ணத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.



தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், முன்னாள் பாரதப் பிரதமரின் கொடுரக் கொலை செயலில் ஈடுப்பட்ட பேரறிவாளனின் விடுதலையில் உறுதியான, உணர்வுபூர்வமான நிலையை எடுக்காமல், ஒருபுறம் ஒப்புக்கு போராட்டம் என்றும் மறுபுறம் பேரறிவாளன் விடுதலையை பாராட்டும், கொண்டாடும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பதும் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுகிறது.

மேலும் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் இந்த உணர்வுபூர்வமான பிரச்சினையில் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது பதவி நலனுக்காகவா? அல்லது சுயநலனுக்காகவா? அல்லது கூட்டணி நலனுக்காகவா? என்று தெரியவில்லை. உண்மையிலேயே ராஜீவ்காந்தியின் கொலை சம்பவத்தை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாத நிலையில் இருப்பது உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News