உள்ளூர் செய்திகள்
கல் குவாரி

விபத்து ஏற்பட்ட குவாரியில் வருவாய், கனிமத்துறை முதன்மை செயலாளர்கள் ஆய்வு

Published On 2022-05-16 09:10 GMT   |   Update On 2022-05-16 09:10 GMT
விபத்து ஏற்பட்ட கல் குவாரியில் வருவாய், கனிமத்துறை முதன்மை செயலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை:

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடை மிதிப்பான்குளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் இறந்துவிட்டார்.

இந்த பாறை சரிவில் சிக்கி உள்ள மேலும் 3 பேரை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த விபத்து நடந்துள்ளது என்று பொதுமக்கள் மற்றும் பாறைச் சரிவில் சிக்கியவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக குவாரி உரிமம் மற்றும் அங்கு வெட்டி எடுக்கப்பட்டு உள்ள கனிமங்களின் அளவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். மேலும் தமிழக அரசும் இது குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்று சம்பவம் நடந்த இடத்துக்கு வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், கனிமம் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் நிர்மல் ராஜ் ஆகியோர் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் தலைமையிலான குழு குவாரியின் மொத்த பரப்பளவு, வெட்டி எடுக்கப்பட்டுள்ள கனிம வளங்களின் அளவை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News