உள்ளூர் செய்திகள்
ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

கன மழையால் சேதம்: ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2022-05-15 11:07 GMT   |   Update On 2022-05-15 11:07 GMT
மலைப்பாதையில் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படும் பட்சத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்த மழை பெய்தது. நேற்று காலையில் ஏற்காட்டில் வழக்கத்தைவிட கடும் குளிர் நிலவியது. மாலையில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது.

அதன்பிறகு கனமழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு வரையிலும் இந்த மழை நீடித்தது. கனமழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 40 அடி பாலத்திற்கும், 60 அடி பாலத்திற்கும் இடையில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதேபோல் 5 மற்றும் 6-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே மலைப்பாதையிலும் மண் சரிவு ஏற்பட்டது. ஏற்காடு மலைப்பாதையில் சுமார் 10 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் சாலையில் பெரிய அளவிலான கற்கள் ஆங்காங்கே உருண்டு கிடந்ததன. இதன் காரணமாக சேலம்ஏற்காடு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சேலத்தில் இருந்து ஏற்காடு சென்ற வாகனங்களும், ஏற்காட்டில் இருந்து கீழே வந்த வாகனங்களும் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன.

மண்சரிவு குறித்து தகவல் அறிந்தவுடன் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பிரபாகரன், தாசில்தார் விஸ்வநாதன், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, போலீசார் மற்றும் செவ்வாய்பேட்டை, ஏற்காடு தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் சாலையில் ஏற்பட்ட மண்சரிவை அகற்றி அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சேலம்ஏற்காடு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

மலைப்பாதையில் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படும் பட்சத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தற்காலிகமாக குப்பனூர் வழியாக வாகனங்களை இயக்க மாவட்ட கலெக்டர் கார்மேகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினரும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News