உள்ளூர் செய்திகள்
அண்ணாமலை, நரேந்திர மோடி

மோடி இந்திய பிரதமராக இருந்திருந்தால், இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்- அண்ணாமலை

Published On 2022-05-14 18:50 GMT   |   Update On 2022-05-14 19:08 GMT
கச்சத்தீவை சுற்றி மீன்பிடிக்க நமக்கு உரிமை உள்ளது என்று, கச்சத்தீவு ஒப்பந்த பிரிவு 6ல் கூறப்பட்டிருந்தது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:

சென்னை தி.நகரில் இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூறியுள்ளதாவது:

இலங்கை போர் உச்சக் கட்டத்தில் இருக்கும்போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் யாரும் இறந்திருக்க மாட்டார்கள். அந்த காலக் கட்டத்தில் இந்தியா எடுத்த முடிவு மிகவும் தவறானது. 

இலங்கை பிரச்னைக்கான தீர்வை கொடுக்கின்ற ஒரே ஒரு மனிதர் நரேந்திர மோடியைத் தவிர யாரும் கிடையாது. 

ஈழ தமிழ் மக்கள் இந்தியாவின்மீது கடும் கோபத்தில் இருந்தனர். இலங்கை இறுதிப் போரில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு தராததால் நம்மை அவர்கள் நம்பாமல் இருந்தனர்.

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. யாழ்ப்பாணக் கலாசார மையத்தை மோடி கட்டிக் கொடுத்துள்ளார். 

இலங்கை தமிழர் விவகாரத்தில் மோடி சரியான வகையில் காய் நகர்த்தி வருகிறார். தனி ஈழம் உருவாக்கப்பட்டால் உலகத்தில் சிறிய நாடாக அதுதான் இருக்கும். இலங்கைக்கு இதுவரை 20,000 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா உதவி செய்துள்ளது.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக இருந்தாலும் அதைச்சுற்றி மீன்பிடிக்க நமக்கு உரிமை இருந்தது. அதைத்தான் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் பிரிவு 6 கூறுகிறது. அவசரநிலை காலக் கட்டத்தில் யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக பிரிவு 6-ஐ ரத்து செய்தனர். 

மோடி வைரம் என்று எனக்கு தெரியும், ஆனால் அவரைப் பற்றி யாரும் இங்கு பேசவில்லை. அதனால் நான் பேசவேண்டிய சூழல் உள்ளது. மோடி உரக்கப் பேசினால் அமெரிக்காவே கேட்கும் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News