உள்ளூர் செய்திகள்
வைகோ

கவர்னர் ஆர்.என்.ரவி அத்துமீறக் கூடாது: ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் போல பேசக்கூடாது- வைகோ

Published On 2022-05-07 07:25 GMT   |   Update On 2022-05-07 07:25 GMT
இந்தியத் தொழில்துறையின் தலைநகரம்தான் தமிழ்நாடே தவிர, மதவெறிக்கு இங்கே இடம் இல்லை என வைகோ கூறியுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒரு மாநிலத்தின் கவர்னர் என்பவர், எந்தத் தத்துவத்தின் சாயலும் தம் மீது படுவதற்கு இடம் தரக்கூடாது. ஆனால் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அரசு அமைப்புச் சட்டத்தின்படி கடமை ஆற்றாமல், அத்துமீறி செயல்பட்டு வருகின்றார். ஒன்றிய பா.ஜ.க. அரசின் முகவராக ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் குரலை எதிரொலிக்கின்றார்.

அது மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் சமயம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று, இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் தமிழ்நாடு என்ற கருத்தை, பலமுறை பேசி இருக்கின்றார். இந்தியத் தொழில்துறையின் தலைநகரம்தான் தமிழ்நாடே தவிர, மதவெறிக்கு இங்கே இடம் இல்லை. வட இந்திய மாநிலங்களைப் போன்ற மதவெறிச் சண்டைகளுக்கு, தமிழ்நாட்டு மக்கள் இடம் தர மாட்டார்கள். இங்கே அனைத்துத் தரப்பு மக்களும், அமைதியாக வாழ்கின்றனர்.

கவர்னர் ரவி, தொடர்ந்து மாநில அரசின் செயல்பாடுகளுக்குக் குறுக்கே நிற்பதையும், இந்துத்துவக் கோட்பாட்டிற்கு ஆதரவான கருத்துகளை முன்மொழிவதையும், அரசு அமைப்புச் சட்ட நெறிகளைக் காலில் போட்டு மிதிப்பதையும், ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்; தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் தரக் கூடாது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என்பது, மாநில அரசின் அதிகாரம் ஆகும். கவர்னர் தலையிட முயற்சிப்பது அத்துமீறல் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News