உள்ளூர் செய்திகள்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தேர்வு அறையில் முகக்கவசம் கட்டாயமா?- விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Published On 2022-05-05 03:00 GMT   |   Update On 2022-05-05 03:00 GMT
பொதுத்தேர்வின் தேர்வறையில் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர்,  பிளஸ் டூ பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள்  அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.  தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறடி இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு தேர்வறைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் அவசியம்,  தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தேர்வு மையங்களில் முழுமையாக கடை பிடிக்க வேண்டும் என்று நேற்றிரவு பொது சுகாதாரத்துறை  இயக்குநர் செல்வ விநாயகம் பெயரில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிக்கை ஒன்று வெளியானது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:-

* பொதுத்தேர்வின் தேர்வறையில் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது.

* பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று எவ்விதமான அறிக்கையும் வெளியிடவில்லை.

* மாணவர்கள் எவ்வித பதற்றமும் அடையாமல் தேர்வை எழுதலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News