உள்ளூர் செய்திகள்
மெரினா கடற்கரையில் பழுதடைந்த கடைகள்

பொதுமக்களுக்கு இடையூறு: மெரினா கடற்கரையில் பழுதடைந்த கடைகள்- உடனடியாக அகற்றப்படுமா?

Published On 2022-05-01 10:08 GMT   |   Update On 2022-05-01 10:08 GMT
கடற்கரை அழகை கெடுக்கும் இந்த பழுதடைந்த கடைகள் மற்றும் ராட்டினங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் மணல் பரப்பை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் இடையூறு ஏற்படுத்தும் பழுதடைந்த கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னை மெ‌ரினா கட‌ற்கரை‌ ஆசியாவிலேயே மிக நீண்ட மணல் பரப்பை கொண்ட கடற்கரை ஆகும். மெரினா கடற்கரை இய‌ற்கை அழகை மெருகூ‌ட்டும் ப‌ணிக‌ள் மாநகராட்சி சார்பில் நட‌ந்து வரு‌கி‌ன்றது.

கண்ணைக் கவரும் வகையில் மெரினா கடற்கரை புல்வெளியில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகிறார்கள்.

மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழகுபடுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள புல்வெளிகளை மாநகராட்சி ஊழியர்கள் சீரமைத்து மரம், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள். அங்கு பச்சை பசேலென அழகிய செடி கொடிகள் கண்ணைக் கவரும் வகையில் உள்ளன.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மெரினா கடற்கரை பல மாதங்களாக மூடப்பட்டதால் கடற்கரை மணல் பரப்பில் அமைக்கப்பட்டிருந்த 1000 க்கும் மேற்பட்ட கடைகள், மற்றும் ராட்டினங்கள் பழுதடைந்து உள்ளன.மேலும் கடைகள் அனைத்தும் சிதைந்து அலங்கோலமாக ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.

விளையாடும் ராட்டினங்கள் துருபிடித்து சிதைந்து காணப்படுகிறது.வெயில், மழையால் இந்த கடைகள் மேலும் சிதைந்து வருகின்றன. கடைகள் மற்றும் ராட்டினங்கள் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளதால் வியாபாரிகள் அதனை கடற்கரையில் போட்டு விட்டு சென்று விட்டனர்.

இதனால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அலங்கோலமாக கிடக்கும் இந்த கடைகள் மற்றும் ராட்டினங்களை பார்த்து வேதனை அடைந்து வருகிறார்கள். கடற்கரை அழகை கெடுக்கும் இந்த பழுதடைந்த கடைகள் மற்றும் ராட்டினங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் மணல் பரப்பை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News