உள்ளூர் செய்திகள்
எஸ்.பி.வேலுமணி, எஸ்.பி.வேலுமணி வீடு

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை- எஸ்.பி.வேலுமணி பேட்டி

Published On 2022-03-15 23:18 GMT   |   Update On 2022-03-15 23:18 GMT
சோதனையின்போது தமது வீட்டில் இருந்து எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கோவை:

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 58 இடங்களில் நேற்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 

இதில், 11.153  கிலோ கிராம் தங்க நகைகள் மற்றும் கணக்கில் வராத ரூ.84 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. 

இதேபோல், எஸ்.பி.வேலுமணி பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் ரூ.34 லட்சம் முதலீடு செய்திருப்பதும் சோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும், செல்போன்கள், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, ஹார்டு டிஸ்க்குகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனைக்கு பின்னர் எஸ் .பி. வேலுமணி தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க அரசு தூண்டுதலின் பேரில் எனது வீட்டிலும் ,எனது சகோதரர் வீடு மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் என்னுடன் பழகியவர்கள் உள்பட பலரது வீடுகளில் சோதனை நடைபெற்று உள்ளது 

இந்த சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெற்றுள்ளது.ஏற்கனவே ஒருமுறை இதுபோன்ற சோதனை நடைபெற்றது .இப்போது மீண்டும் 2-வது முறையாக சோதனையை நடத்தி உள்ளனர். 

எனது வீட்டில் இருந்து எந்த பொருளையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றவில்லை. கடந்த முறையும் கைப்பற்றவில்லை. இந்த முறையும் கைப்பற்றவில்லை. ஆனால் நகை பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியிட்டுள்ளனர். இது தவறானது. 

வேண்டுமென்றே திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் இதுபோன்று செயல்படுகிறார்கள். கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதன் காரணமாக திமுக அரசு வேண்டுமென்றே லஞ்ச ஒழிப்பு போலீசாரை ஏவி விட்டுள்ளது. 

உள்ளாட்சி தேர்தலில் முழுக்க முழுக்க தி.மு.க. முறைகேடாக வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வை நசுக்க வேண்டும் என்று திமுக செயல் படுகிறது.இந்த சோதனை குறித்து சட்ட ரீதியாக அணுகுவோம். 

எல்லோருக்கும் பொதுவானவராக செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் பழிவாங்குகிறார். எனது சகோதரர் வெளிநாட்டில் உள்ளார். 

அவரது குடும்பத்திரை பார்க்க எனது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு சென்றால் கூட தவறான தகவல்களை பரப்புகிறார்கள். எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை நாங்கள் கொண்டுள்ளோம். இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News