உள்ளூர் செய்திகள்
.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

Published On 2022-03-01 10:17 GMT   |   Update On 2022-03-01 10:17 GMT
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
சேலம்:

இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மத்திய அரசு,   பொதுப்பிரிவு  என  ஒதுக்கியுள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் பொதுமக்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில்  அட்மிஷன் வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு பிரிவு என ஒதுக்கியுள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர்கள் மற்றும்  பொதுத்துறை நிறுவனத்தினரின் குழந்தை களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதுபோல் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்த குழந்தைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள்,  எஸ்.சி.பிரிவு குழந்தைகளுக்கு 15 சதவீத இடங்கள், எஸ்.டி.பிரிவு குழந்தைகளுக்கு 7.5 சதவீத இடங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓ.பி.சி. பிரிவு குழந்தைகளுக்கு 27 சதவீத இடங்கள், மாற்றுதிறன் குழந்தைகளுக்கு 3 சதவீத இடங்கள் வழங்கப்படுகிறது.

வருகிற 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா சங்கதன் இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் 6 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சம் 8 வயது வரை இருக்க  வேண்டும். 6, 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1ம் வகுப்பில் சேர்க்கை வழங்கப்படும். புதிய கல்வி கொள்கையின்படி, வருகிற கல்வியாண்டு முதல் இந்த வயது வரம்பு உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் வகுப்புக்கும் இந்த ஆண்டு 6 வயது நிறைந்த மாணவர்கள் சேர்க்கப் படுவார்கள். மாணவர்கள் 10ம் வகுப்பு முடித்த பின் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு இல்லை என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 21ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் முதல் பட்டியல் மார்ச் 25ந்தேதி வெளியிடப்படும் என கேந்திரிய வித்யாலயா சங்கதன்  அறிவித்துள்ளது.
Tags:    

Similar News