உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

அவினாசி- அத்திக்கடவு திட்டப்பணிகள் 93 சதவீதம் நிறைவு 2 மாதங்களில் வெள்ளோட்டம்

Published On 2022-02-20 03:34 GMT   |   Update On 2022-02-20 03:34 GMT
நடப்பாண்டு, பருவமழை பெய்து காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து உபரிநீர் வெளியேறும் பட்சத்தில் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
அவிநாசி:

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் 10 ஒன்றியம் 25 லட்சம் மக்கள், 50 லட்சம் கால்நடைகள், 74 குளம், 971 குட்டை, 24 ஆயிரத்து 458 ஏக்கர் விவசாய நிலத்துக்கான பாசன வசதியை நிலத்தடி நீர் செறிவூட்டல் மூலம் தன்னிறைவு பெறச்செய்யும் திட்டமே அத்திக்கடவு - அவிநாசி திட்டம். இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்  என்ற எதிர்பார்ப்பு 60 ஆண்டு கால கனவு என்ற போதிலும் கடந்த 2014, 2015-ல் இக்கோரிக்கை வலுப்பெற்றது.

‘அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ஏராளமான கிராமங்களில் கிளை விட்டு பரவியது. கடந்த 2015 முதல் மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல வடிவங்களில் போராட்டம் உருமாறியது. 

2016 பிப்ரவரி 9-ல்தொடங்கிய உண்ணாவிரத போராட்டம், பிப்ரவரி 19-ல் நிறைவு பெற்றது. அதன்பின்னரே திட்டத்தின் செயல்பாடு வேகமெடுத்தது. 

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அவிநாசியில் ரூ.1,652 கோடி செலவில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பினரின் மேற்பார்வையில் ‘எல் அண்ட் டி’ நிறுவனத்தினரால் பணி நடந்து வருகிறது. 

கடந்த டிசம்பர் மாதமே பணி நிறைவு பெற வேண்டிய நிலையில் கொரோனா ஊரடங்கு, தொழிலாளர்கள் வெளியூர் சென்றது உள்ளிட்ட சில காரணங்களால் தாமதமாகி வருகிறது. 

இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி கூறுகையில், 

விவசாயிகளின் தொடர் போராட்டங்களின் விளைவாக நடைமுறைக்கு வந்த அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருவது வருத்தமளிக்கிறது. பணி தாமதமாக காரணங்கள் எதுவாக இருப்பினும் பணியை விரைவில் முடித்து குளம், குட்டைகளில் நீர் நிரப்ப வேண்டும் என்றார்.

 அத்திக்கடவு - அவிநாசி திட்ட செயல்பாடுகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த 16-ந்தேதி நிலவரப்படி 93 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 

ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.1,480 கோடி செலவிடப்பட்டுள்ளது. எம்.எஸ்., ரக குழாய் பதிக்கும் பணி 267 கி.மீ., நீளத்துக்கு பொருத்தப்பட வேண்டிய நிலையில் 248 கி.மீ., தூரத்துக்கு பொருத்தப்பட்டு விட்டது. எச்.டி.பி.ரக குழாய், 798 கி.மீ. தூரத்துக்கு பொருத்தப்பட வேண்டிய நிலையில் 680 கி.மீ., நீளத்துக்கு பொருத்தப்பட்டு விட்டது. 

இன்னும் இரு மாதத்தில் வெள்ளோட்டம் பார்ப்பதற்கான வாய்ப்புள்ளது. 
'
நடப்பாண்டு, பருவமழை பெய்து காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து உபரிநீர் வெளியேறும் பட்சத்தில் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News