உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

Published On 2022-01-26 06:08 GMT   |   Update On 2022-01-26 06:08 GMT
பொதுமக்கள் நலன் கருதி அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. சென்னையில் தொற்று குறையத்தொடங்கி உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா 3-வது அலை சமூக பரவலாக மாறியதால் வேகமாக பரவத்தொடங்கியது.

இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இரவு 10 மணிவரை மட்டுமே அனைத்து கடைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 7-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பொங்கல் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய நிலை ஏற்பட்டதால் அதனை தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 9, 16, 23 ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. சனிக்கிழமை இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டன.

அரசு கொண்டுவந்த இந்த கட்டுப்பாடுகள் வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும். ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு குறித்து ஒவ்வொரு வாரமும் முதல்-அமைச்சர் தனியாக அறிவித்து வருகிறார்.

பொதுமக்கள் நலன் கருதி அரசு எடுத்த இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. சென்னையில் தொற்று குறையத்தொடங்கி உள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிய இன்னும் 4 நாட்களே இருப்பதால் அடுத்தகட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை நிபுணர்கள் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளால் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்துள்ள நிலையில் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டுமா? முழு ஊரடங்கு தொடர வேண்டுமா? அல்லது கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை அமல்படுத்தலாமா என்பது குறித்து விவாதிக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். சுகாதாரத்துறை அதிகாரிகள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்த கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் மற்றும் தொழில்கள் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கவே அரசு விரும்புகிறது.


Tags:    

Similar News