உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கரும்புக்கு தண்ணீர் பாய்ச்ச நவீன கருவி

Published On 2022-01-22 07:48 GMT   |   Update On 2022-01-22 07:48 GMT
கரும்பின் பிழிதிறன் அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்படுகிறது. வெல்ல உற்பத்தியும் கூடுதலாக கிடைக்கிறது.
உடுமலை:

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு மற்றும் ஏழு குள பாசனப்பகுதிகளில் கரும்பு சாகுபடி அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது. 

கால்வாய்களில் இருந்து நேரடிப்பாசனம் வாயிலாகவே கரும்புக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இதனால் சில நேரங்களில் பயிரின் தேவையை விட மண்ணில் ஈரப்பதம் கூடுதலாகிறது. குறித்த நேரத்தில் தண்ணீர் கிடைக்காத நிலையும் உருவாகிறது.

கரும்பின் பிழிதிறன் அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்படுகிறது. வெல்ல உற்பத்தியும் கூடுதலாக கிடைக்கிறது. கரும்பின் பிழிதிறனை அதிகரிக்க சாகுபடியில் நீர் நிர்வாகத்திலும் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

ஓராண்டு பயிரான கரும்பில் முறையான நீர் நிர்வாகம் இல்லாததால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் கரும்பு இனப்பெருக்கு நிலையம் சார்பில் கரும்பு விவசாயிகளுக்காக புதிய கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

‘மண் ஈரப்பதங்காட்டி’ எனப்படும் இக்கருவியிலுள்ள நீளமான கம்பிகளை வேர்களின் அதிகப்பட்ச நீளத்தில் கால் பங்கு அளவுக்கு மண்ணில் உள்ளே செலுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஈரப்பத அளவுக்கு ஏற்ப கருவியிலுள்ள ‘சென்சார்’ வாயிலாக குமிழ் விளக்குகள் ஒளிரும். 

விளக்கின் வண்ணத்துக்கேற்ப கரும்புக்கு தண்ணீர் பாய்ச்சுவதை விவசாயிகள் தீர்மானிக்கலாம். சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ள விவசாயிகளும் இந்த கருவியை பயன்படுத்த முடியும். காய்ச்சலும், பாய்ச்சலும் பயிருக்கு நன்று’ என்ற அடிப்படையில் கரும்பு சாகுபடியிலும் நீர் சிக்கனத்தை பின்பற்றி கூடுதல் மகசூல் பெறலாம் என கரும்பு இனப்பெருக்கு நிலையத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இக்கருவி குறித்த விழிப்புணர்வு உடுமலை, மடத்துக்குளம் பகுதி விவசாயிகளிடையே இல்லை. கரும்பு மகசூல் குறைவது, போதிய விலை கிடைக்காதது போன்ற பிரச்சினைகளால் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

இதைத்தவிர்க்க சாகுபடியில் நீர் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் ஈரப்பதங்காட்டி கருவியை வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக மானியத்தில் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News