உள்ளூர் செய்திகள்
பணம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

Published On 2022-01-15 11:46 GMT   |   Update On 2022-01-15 11:46 GMT
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கிறது. வருகிற மார்ச் மாதம் முதல் இது மேலும் 3 சதவீதம் உயர உள்ளது.
சென்னை:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த மாதம் முதல் அந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான அறிவிப்பு வருகிற மார்ச் மாதம் வெளியாகும் என்று மத்திய அரசு ஊழியர் சங்க முன்னணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கிறது. வருகிற மார்ச் மாதம் முதல் இது மேலும் 3 சதவீதம் உயர உள்ளது. இதன் மூலம் இனி 34 சதவீத அளவுக்கு அகவிலைப்படி கிடைக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் அளவுக்கு சம்பளம் கிடைத்து வருகிறது. அதுபோன்ற சம்பளம் வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.500 வரையில் இனி கிடைக்க வாய்ப்புள்ளது.

அகவிலைப்படி உயர்வால் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கூடுதல் சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஒரே அளவிலான அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது. அந்த அறிவிப்புக்காக லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் காத்து இருக்கிறார்கள்.

மேலும் 18 மாத நிலுவைத் தொகையும் விரைவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பையும் மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

இந்த நிலுவைத்தொகை குறைந்தபட்சம் ரூ.13 ஆயிரம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் வரை கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு பணியாளர்களுக்கு விரைவில் இந்த அறிவிப்புகளை கண்டிப்பாக மத்திய அரசு வெளியிட வாய்ப்பு இருப்பதாக ஊழியர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு வர இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. வருகிற 26-ந் தேதிக்குள் 8-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி இந்த அறிவிப்பு வர இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அது தொடர்பாக மத்திய அரசு ஊழியர் சங்கத்தினர் கூறும் போது, ஊதிய உயர்வு கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News