உள்ளூர் செய்திகள்
திருப்பூர் சந்திரகாவி பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்ற காட்சி.

18-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-01-08 09:58 GMT   |   Update On 2022-01-08 10:01 GMT
18வது கட்டமாக இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 18வது சுற்று கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 18 லட்சத்து 83 ஆயிரத்து  416 பேர் முதல் ‘டோஸ்’ செலுத்தியுள்ளனர்.

மேலும் 12 லட்சத்து 63 ஆயிரத்து 618 பேர் இரண்டாவது ‘டோஸ்’ செலுத்தியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 884 பேர் முதல் தவணையும், 4 லட்சத்து 62 ஆயிரத்து 885 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்த வேண்டுமென கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி 18வது கட்டமாக இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில், ஒருநபர் கூட விடுபடக்கூடாது என தொடர்ந்து பிரசாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று காலை 9 மணிக்கு 18-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. 

மேலும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், நகர்நல மையங்கள், ரெயில் நிலையம்,பள்ளிகள், ஊராட்சி அலுவலகம் உட்பட மக்கள் கூடும் பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 
Tags:    

Similar News