உள்ளூர் செய்திகள்
சரக்கு வாகனங்கள்

முழு ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கில் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் என்னென்ன?

Published On 2022-01-05 11:32 GMT   |   Update On 2022-01-05 11:32 GMT
முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

1) மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும்  ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை. 

எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பின்வரும் அத்தியாவசியச் செயல்பாடுகள் மட்டும்  அனுமதிக்கப்படும். 

* மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள்

* மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள் (பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிருவாகம் உறுதி செய்ய வேண்டும்.)

* அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். 

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். 

* உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.  



2) வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். 

இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.   

* பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது.

* 9-1-2022 அன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும்.  இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

* 9-1-2022 மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News