உள்ளூர் செய்திகள்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

Published On 2022-01-04 06:04 GMT   |   Update On 2022-01-04 07:08 GMT
தற்போது கொரோனா பரவல் அச்சம் மீண்டும் அதிகரித்து இருப்பதால் டோக்கன்கள் வினியோகித்து அதற்கேற்ப பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:

தமிழர் திருநாளான தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பை ஆண்டு தோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு கூடுதல் அம்சங்களை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேர்த்து வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி இந்த தடவை 21 பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. துணிப்பையில் வைத்து இந்த பொருட்கள் வழங்கப்படும். அதுமட்டுமின்றி முதல் முறையாக இந்த தடவை பொங்கலுக்கு முழு கரும்பும் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்கள் விவரம் வருமாறு:-

பச்சரிசி

1 கிலோ

வெல்லம்

1 கிலோ

முந்திரி

50 கிராம்

திராட்சை

50 கிராம்

ஏலக்காய்

10 கிராம்

பாசிப்பருப்பு

500 கிராம்

நெய்

100 கிராம்

மஞ்சள் தூள்

100 கிராம்

மிளகாய் தூள்

100 கிராம்

மல்லித்தூள்

100 கிராம்

கடுகு

100 கிராம்

சீரகம்

100 கிராம்

மிளகு

50 கிராம்

புளி

200 கிராம்

கடலை பருப்பு

250 கிராம்

உளுத்தம் பருப்பு

500 கிராம்

ரவை

1 கிலோ

கோதுமை மாவு

1 கிலோ

உப்பு

500 கிராம்

கரும்பு

முழுமையானது

துணிப்பை

1


பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பை வழங்குவதற்கு அடையாளமாக சிலருக்கு மட்டும் அவர் பரிசு பைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்குகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் ஆங்காங்கே இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறார்கள்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெறும் பொருட்கள் அனைத்தும் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதற்கு ஏற்ப மாவட்ட கலெக்டர்கள் பரிசுப் பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்காக தமிழக அரசு ரூ.1088 கோடி ஒதுக்கீடு செய்து இருந்தது. இதன்மூலம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஏலம், முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 2.15 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொதுமக்கள் சிரமமின்றி நியாயவிலைக் கடைகளுக்கு வந்து இந்த பரிசுத் தொகுப்பை வாங்குவதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கூட்டுறவுத்துறையால் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்ட பொருட்களை கடந்த சில தினங்களாக நியாய விலைக்கடை ஊழியர்கள் தனி தனி பொட்டலங்களாக பிரித்தனர். இரவு, பகலாக இந்த பணி நடந்தது. முதல் முறையாக பரிசுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள முழு கரும்பும் நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது.

தற்போது கொரோனா பரவல் அச்சம் மீண்டும் அதிகரித்து இருப்பதால் டோக்கன்கள் வினியோகித்து அதற்கேற்ப பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த டோக்கன்களில் நியாயவிலைக்கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், பொருள் வழங்கும் தேதி, டோக்கன் எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்று உள்ளன. தினமும் 100 பேருக்கு மட்டும் பரிசுத்தொகுப்பு வழங்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்களை பெற்று அதில் குறிப்பிட்டுள்ள தேதிக்கு ஏற்ப பொதுமக்கள் நியாய விலைக்கடைகளுக்கு சென்று தங்களது பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இன்று முதல் 13-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. உரிய கால அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் நியாயவிலை கடைகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


Tags:    

Similar News