உள்ளூர் செய்திகள்
டிடிவி தினகரன்

யார் மன்னிப்பு கேட்க வேண்டும்?- ‘குட்டி கதை’ பேச்சுக்கு தினகரன் கடும் கண்டனம்

Published On 2021-12-25 05:46 GMT   |   Update On 2021-12-25 06:40 GMT
தவறு செய்தவர் யார்? துரோகம் செய்தது யார்? யாரால் எந்த ஆட்சி வந்தது என்பது உலகத்துக்கே தெரியும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் விழாவில் பேசும்போது, “தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வது தான் தலைமைக்கு அழகு” என குட்டிக்கதை ஒன்றை கூறி இருந்தார்.

சசிகலாவை குறிப்பிட்டு தான் ஓ.பன்னீர்செல்வம் இதுபோன்று பேசி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கருத்து கேட்டபோது, “சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது” என்று காட்டமாக பதில் அளித்தார்.

இது தொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த டி.டி.வி.தினகரனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகியோரின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இது தொடர்பாக தினகரன் அளித்த பேட்டி வருமாறு:-

தவறு செய்தவர்கள் மன்னிப்பு கேட்டால் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் பேசியதாக சொல்கிறீர்கள்.

உண்மையை சொல்லப்போனால் பன்னீர்செல்வம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனென்றால், அவர் தான் தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு சட்டப்பேரவையில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்.

ஓ.பன்னீர்செல்வம் என்ன சொன்னார் என்பதை நான் முழுவதுமாக பார்க்கவில்லை. நீங்கள் கேட்டதனால் சொல்கிறேன். யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்? திருந்தி வந்தால் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று யாரை சொல்கிறார்? என்று தெரியவில்லை.

அவர்கள் தான் திருந்தி வந்து, எங்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டுமே தவிர, நாங்கள் அவர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது தான் உண்மை. பன்னீர்செல்வம் ஏதோ பேசியதை நீங்கள் திருத்தி கேட்பதாக தான் நினைக்கிறேன்.

ஓ.பி.எஸ். எதனை வைத்து அப்படி சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் அதற்கு ஜெயக்குமார் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு ஏன் பதில் சொல்கிறார் என்பதுதான் தெரியவில்லை. எதற்காக இப்படி பேசுகிறார்கள் என்பது கூட எனக்கு தெரியவில்லை.

ஏனென்றால் திருந்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் அவர்கள்தான். பேசியவர்கள் தான் திருந்த வேண்டும். அதனால் சின்னம்மா (சசிகலா) மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லையே. ஏனென்றால் ஜெயக்குமார், பழனிசாமி போன்றவர்களை எல்லாம் அவர்தான் பதவியில் உட்கார வைத்துவிட்டு பெங்களூரு சென்று விட்டார்.

பிறகு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் வருகிறது? தவறு செய்தவர் யார்? துரோகம் செய்தது யார்? யாரால் எந்த ஆட்சி வந்தது என்பது உலகத்துக்கே தெரியும்.

ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள், இரட்டை இலையை முடக்கியவர்கள் தான் திருந்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News