உள்ளூர் செய்திகள்
விஜயகாந்த்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- விஜயகாந்த் வலியுறுத்தல்

Published On 2021-12-01 21:34 GMT   |   Update On 2021-12-01 21:34 GMT
மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தால் மட்டும் போதாது. மழை நீரை அகற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.

தற்போது மழை சிறிது ஓய்ந்திருக்கும் நிலையில், குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் இன்னும் வடியாததால் சென்னை மாநகரம் தீவு போல் காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தேங்கியிருக்கும் மழைநீரால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஆறாக ஓடுவதால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்றுகளும் வேகமாக பரவி வருகிறது.

எனவே, மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தால் மட்டும் போதாது. மழை நீரை அகற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், மழை நீரில் பயிர்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News