செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

Published On 2021-11-25 08:58 GMT   |   Update On 2021-11-25 08:58 GMT
கோவை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 117 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலையாக கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் வேகமாக பரவியது. தினசரி 2,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சிகிச்சை பெற படுக்கைகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும் மாவட்ட முழுவதும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து பரிசோதனை முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 49 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,455 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 110 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 800 ஆக உள்ளது. கொரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 1,259 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News