செய்திகள்
கொரோனா வைரஸ்

துக்கம் விசாரிக்க சென்று திரும்பியவர்களால் ஒரே கிராமத்தில் 29 பேருக்கு கொரோனா

Published On 2021-11-09 10:14 GMT   |   Update On 2021-11-09 10:14 GMT
அன்னூர் ஒன்றியத்தில் ஒரே கிராமத்தில் கடந்த 27-ந்தேதியில் இருந்து நேற்று வரை 29 பேருக்கு தொற்று உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பொகலூர் ஊராட்சியை சேர்ந்தது சொக்கட்டாம்பள்ளி. இங்கு சில நாட்களுக்கு முன்பு துக்க விசாரிக்க கிராம மக்கள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சென்று வந்தனர். வந்தவுடன் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு சுகாதாரத்துறையினர் சிறப்பு முகாம் நடத்தினர். இதில் காய்ச்சல் வந்தவர்களுக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் என 80 பேருக்கு தொடர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 29 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்த தகவல் அறிந்தவுடன் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் கோவிந்தராஜ் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன், டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு அங்கு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து அந்த கிராமத்தில் குமரன் நகர், கணபதி புதூர், சொக்கட்டாம்பள்ளி என அந்த கிராமம் முழுக்க சீல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் 5 நாட்களுக்கு நடமாட தடை விதிக்கப்பட்டது. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். அங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்ததால் மாணவ, மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து, ஆசிரியர்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். தொற்று உறுதியானவர்களில், அதிக பாதிப்பு இல்லாதவர்கள், அறிகுறி உள்ளவர்கள் கோவை கொடிசியாவில் அனுமதிக்கப்பட்டும், பாதிப்பு கூடுதலாக உள்ளவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நேற்றும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அன்னூர் ஒன்றியத்தில் ஒரே கிராமத்தில் கடந்த 27-ந்தேதியில் இருந்து நேற்று வரை 29 பேருக்கு தொற்று உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதே ஊராட்சியில் 30 பெண் கோவையில் அரசு ஆஸ்பத்திரியில் தொற்று பாதிப்பில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து அந்தப் பெண் வசித்த வீடு இருக்கும் பகுதியிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தூய்மைப் பணி செய்யப்பட்டது. இளம்பெண் பலியானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொது மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News