செய்திகள்
கைது

பா.ஜ.க. பெண் நிர்வாகி குறித்து அவதூறு: படங்களை போலி முகநூல் கணக்கில் பதிவு: பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2021-11-06 09:17 GMT   |   Update On 2021-11-06 09:17 GMT
கட்சியில் உயர் பதவி வழங்கப்படுவதை தடுக்க பா.ஜ.க. பெண் நிர்வாகி குறித்து முக நூலில் அவதூறு பரப்பிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி:

திருச்சி தில்லைநகர் பகு தியைச் சேர்ந்தவர் காளீஸ் வரன் (வயது 45). பா.ஜ.க. மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். திருச்சியை அடுத்த கல்லணை அருகே உள்ள கிளிக்கூடு பகுதியை சேர்ந்தவர் சுசிலா குமாரி (40). இவர் புறநகர் மாவட்ட பா.ஜ.க. செயலாளராக உள் ளார்.

இதில் சுசிலா குமாரிக்கு பா.ஜ.க.வில் உயர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி ஒருங்கிணைப்பாளராக உள்ள திலகா (42) என்பவருக்கு பிடிக்கவில்லை. எனவே சுசிலா குமாரிக்கு களங்கம் ஏற்படுத்த திலகா திட்டம் தீட்டியுள்ளார்.

ஏற்கனவே திலகா அதே பகுதியில் உள்ள காளி கோவிலை நிர்வகித்து வருகிறார். அங்கு பில்லி, சூனியம் எடுத்தல், மாந்திரீகம் தொடர்பாக பிரார்த்தனைகள் நடத்தப்படுவதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

இதனை பார்த்த தூத்துக்குடியை சேர்ந்த ரவிமுத்துக்குமரன் (45) என்பவர் திலகாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தனக்கு பெரும் பணமிழப்பு ஏற்பட்டதாகவும், அந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும், அதற்கு பிரார்த்தனை செய்யுமாறும் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரை முகநூலில் நண்பராகும்படி திலகா கேட்டுக்கொண்டார். மேலும் தான் அனுப்பும் சில படங்கள், கருத்துக்களை குறிப்பிட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

அதன்படி திலகா, பா.ஜ.க. மாவட்ட செயலாளரான காளீஸ்வரனின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்து, அவரது படத்துடன் போலியான ஒரு முகநூல் பக்கத்தை தொடங்கினார். அதில் அரசியல் எதிரியான சுசிலா குமாரி குறித்து அவதூறு தகவல்களை ரவிமுத்துக்குமரனுக்கு அனுப்பி, போலியான முகநூல் பக்கத்தில் பதிவிட வைத்துள்ளார்.

அதேபோல் இந்த பிரச்சினையில் தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் திலகா, அவதூறு படங்கள், கருத்துக்களை ரவி முத்துக்குமரனுக்கு அனுப்பியதும், தனது பக்கத்தில் இருந்து அழித்து விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதேபோல் காளீஸ்வரன் பெயரில் உருவாக்கப்பட்ட போலி முகநூல் பக்கத்தில் சுசிலா குமாரி பற்றிய தகவல்களை பரப்பி வந்துள்ளார்.

இதனை அறிந்த காளீஸ்வரன் தில்லை நகர் போலீசில் புகார் அளித்தார். பின்னர் அந்த புகார் குறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார்.

இதில் திலகாவும், ரவி முத்துக்குமரனும் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் அதிரடியாக கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News