செய்திகள்
மா சுப்பிரமணியன்

அனைத்து கிராமங்களிலும் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடக்கம்

Published On 2021-11-02 01:59 GMT   |   Update On 2021-11-02 01:59 GMT
தமிழகத்தில் 400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு தடுப்பு பணியிலும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை :

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தொடக்க பள்ளியிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று வருகை தந்தனர்.

அவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இனிப்பு வழங்கி வரவேற்றார். அப்போது தென்சென்னை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 71 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 31 சதவீதம் பேருக்கு 2-வது தவணை
கொரோனா தடுப்பூசி
யும் போடப்பட்டுள்ளது. முதல் தவணை 100 சதவீதம் பேருக்கு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2-வது தவணை தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் இந்த பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.



18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. வழங்கியதும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

கடந்த மாதங்களில் வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடபட்டது. தற்போது வார நாட்களில் கொரோனா தடுப்பூசி போடுகிறவர்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில், ஒரு ஊராட்சிக்கு 7 கிளை கிராமங்கள் என்ற வகையில் 70 முதல் 80 கிராமங்களுக்கும் டாக்டர், செவிலியர் என மருத்துவ குழு வாகனத்தில் நேரடியாக அவர்கள் இல்லங்களுக்கு சென்று, தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தை நாளை (இன்று) செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்க உள்ளேன். அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. எனவே கட்டுப்பாட்டை தற்போது தளர்த்த வாய்ப்பு இல்லை.

தமிழகத்தில் 400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு தடுப்பு பணியிலும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிக்கலாம்...கனமழை எதிரொலி - கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
Tags:    

Similar News