செய்திகள்
கோப்புபடம்

ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா - பின்னலாடை துறையினர் வலியுறுத்தல்

Published On 2021-10-25 03:56 GMT   |   Update On 2021-10-25 03:56 GMT
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளதால் உள்ளூர் திட்டக்குழும பரப்பை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்பூர்:

திருப்பூருக்கு புதிய ‘மாஸ்டர் பிளான்’ தயாரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் பின்னலாடை துறையினர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன் வைத்தனர்.

திருப்பூர் பின்னலாடை தொழில் ஒரே வளாகத்தில் இயங்குவதில்லை. பல்வேறு ‘ஜாப் ஒர்க்‘ நிறுவனங்களுக்கு சென்று உற்பத்தி நிறைவு பெறுகிறது. எனவே ஒருங்கிணைந்த தொழிற்பூங்காக்கள் அமைக்க வேண்டும். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் 15 கி.மீ., சுற்றளவில் விஸ்தரிப்பு செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளதால் உள்ளூர் திட்டக்குழும பரப்பை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும். வடமாநில தொழிலாளர் பாதுகாப்பாக தங்க வசதி செய்ய வேண்டும். கோவை, திருப்பூர் , ஈரோடு மாவட்டங்கள் இடையே மெட்ரோ ரெயில் இயக்க வேண்டும்.

முதல்கட்டமாக கோவை - திருப்பூர் இடையே இயக்க வேண்டும். பணிகளை எளிதில் முடிக்க நொய்யல் ஆற்றங்கரையோரமாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிட வேண்டும். நொய்யல் ஆறு உட்பட நீர்நிலைகள் மாசுபடாமல் தடுக்க சிறப்பு திட்டம் உருவாக்க வேண்டும்.

திருப்பூரில் கூடுதல் இணைப்பு ரோடுகள் ‘ரிங்’ ரோடுகள், நொய்யல் பாலங்கள், ரெயில்வே பாலங்கள், பறக்கும் பாலம் அமைக்க திட்டமிட வேண்டுமென தொழில்துறையினர் கோரிக்கையை முன் வைத்தனர். 

திருப்பூர் எம்.பி., சுப்பராயன் சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில்’ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகள் போல் தெளிவான திட்டமிடல் இல்லாமல் அவசர கோலத்தில் செய்யக் கூடாது. பள்ளியை இடித்து கார் ஸ்டாண்ட் கட்டியது போல் குழப்பி விடக்கூடாது.

குப்பை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும். பாறைக்குழியை தேடிக்கொண்டிருக்க கூடாது. தொங்கும் பாலம் பணிகளை முடித்து புதிய பாலங்கள் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 
Tags:    

Similar News