செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்

Published On 2021-10-21 08:03 GMT   |   Update On 2021-10-21 09:26 GMT
சி.என். ஒ.எஸ். ஒபினியோம் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் இந்தியாவிலேயே தலைசிறந்த மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் முதலிடம் பெற்று உள்ளார்.
சென்னை:

இந்தியாவில் முதல்- அமைச்சர்களின் செல்வாக்கு குறித்து ‘சி.என். ஒ.எஸ். ஒபினியோம்” என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் நாட்டில் சிறந்த முதல்- அமைச்சர்களாக 5 முதல்-அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பெற்றுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்திய அமைப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்- அமைச்சராக திகழ்கிறார்.

இந்த கணக்கெடுப்பில் அவர் பெற்றுள்ள நிகரப் புள்ளிகள் 67 ஆகும். அவருடைய மாநிலத்தில் (தமிழ்நாட்டில்) கணக்கெடுப்பு நடத்தப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் அவருடைய தலைமையில் திருப்தி அடைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

12 சதவீதம் பேர் அவருடைய செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறி உள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பில் திருப்தி அடைந்தவர்களின் சதவீதத்தில் திருப்தி இல்லை என்று கூறுபவர்களைக் கழித்து மீதமுள்ளவர்களே நிகர ஆதரவாளர்களாகக் கணக்கிடப்படுகிறது.

அதன்படி தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகரப்புள்ளிகள் 67 பெற்று இந்தியாவிலேயே தலைசிறந்த மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்-அமைச்சராக முதலிடம் பெற்று உள்ளார்.



தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மக்கள் செல்வாக்கு பெற்ற சிறந்த முதல்-அமைச்சர்களில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 3-வது இடம் பெற்றுள்ளார். ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் 4-வது இடத்திலும், அசாம் முதல்-மந்திரி ஹேமந்த் பிஸ்வா சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர்.

இவ்வாறு சி.என்.ஓ.எஸ். ஒபினியோம் அமைப்பு தெரிவித்து உள்ளது.


Tags:    

Similar News