செய்திகள்
கொள்ளை

திண்டுக்கல்லில் பர்னிச்சர் கடையை உடைத்து பொருட்கள் கொள்ளை

Published On 2021-10-15 16:07 GMT   |   Update On 2021-10-15 16:07 GMT
திண்டுக்கல்லில் பர்னிச்சர் கடையை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் ஏ.பி.நகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 40). அதே பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று ஆயுதபூஜையையொட்டி பூஜையை முடித்து விட்டு கடையை பூட்டிச் சென்றனர். இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா உள்ளே சென்று பார்த்தார். பொருட்கள் அங்கும் இங்கும் சிதறி கிடந்தன. மேலும் சில பொருட்கள் சேதமடைந்திருந்தன.

டி.வி., பேன், குக்கர் உள்பட வீட்டு உபயோக பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகல்நகர் பகுதியில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளையர்கள் புகுந்தனர். பணம் கிடைக்காத விரக்தியில் கல்லாப்பெட்டியை உடைத்து ரோட்டில் வீசி சென்றனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் நேற்று நகர் பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆட்டோ ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆயுத பூஜை கொண்டாட போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். போலீசாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி கடையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News